You are in Home » Spl.Types » VIPs » சவால்களை நோக்கி சட்டக் கல்வி...
LATEST NEWS
By |Email the author|Oct 05,2014
news
இந்தியாவில் இப்போதைய சட்டக்கல்வி எதிர் கொண்டிருக்கும் பிரச்னைகளை அடையாளம் காணவும் தற்போது இருந்துவரும் தரம் குறைவான நிலையை கட்டுப்படுத்தி அதை சமூகத்துக்கு ஏற்ற முறையில் மாற்றியமைக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்த ஆராய்ச்சியின் ஆரம்பம் தான் இந்த கட்டுரை.

சமீப காலங்களில் நீதிமன்றங்களில் ஆஜராகும் பாதிக்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் மிகக் குறைந்த அளவிலேயே பயிற்சி பெற்றவர்களாக இருப்பது நாம் கன்கூடாக பார்க்கக்கூடிய ஒன்று. அவர்களுடைய தொழில் ரீதியான செயல்பாடு மற்றும் தொழில் சம்பந்தப்பட்ட ஒழுக்க முறை பெரும்பாலான மக்களுக்கு பாதிப்பைத் தருகிறது. இதற்கு காரணம் அவர்கள் உரிய சட்ட அறிவைப் பெற்றிருக்கவில்லை என்பது தான். அவர்கள் கட்சிக்காரர்களின் ஈடுபாடு மற்றும் பொதுமக்களின் மூலமான ஆதாயத்தில் அவர்களுடைய தொழிலுக்கான பயிற்சி பெறுவதில் ஈடுபட்டு வருவதன் விளைவு தான் இது.

நாட்டில் தற்போதுள்ள பத்து இலட்சத்திற்கும் அதிகமான வழக்குரைஞர்களுடன் வருடாவருடம் சேரும் சுமார் இரண்டு இலட்சம் பட்டதாரிகளில் பெரும்பாலோனோர் 500 சட்டக் கல்லூரிகளிலிருந்து வகுப்புக்கு ஒழுங்காகச் செல்லாமல் தேர்ச்சி அடைந்தவர் கள் என்பது எல்லோருமே பொதுவாக அறிந்த ஒன்றாகும். முடிந்தவரை இந்த நிலை தடுக்கப்பட வேண்டும். இந்த துரதிர்ஷ்டவசமான மற்றும் சீர்குலைக்கும் நிலை தோன்றிய விதம் பற்றி நாம் சிந்திக்க வேண்டியது அவசியம்.

முன்னொரு காலத்தில் சட்டத்தின் புலனாய்வு குறித்த பயிற்சி இருந்ததாக எந்த ஆதாரமும் இதுவரை இல்லை என்றாலும், தானே பெற்ற பயிற்சியின் வாயிலாக அரசர் நியாயம் வழங்க வேண்டியிருந்தது. அரசர் அவர் கீழ் நியாயமாக பாரபட்சமற்ற முறையில் செயல்படக் கூடிய நேர்மைக்கு பெயர்போனவர்களை நியமிப்பதன் மூலமாக நீதியை நிலை நாட்டினார். அரசரை வழி நடத்திச் செல்பவர்கள் அல்லது அரசரால் நியமிக்கப்பட்டவர்கள் தர்மத்தைக் கடைபிடித்தார்கள்.

ஆங்கிலேயர்கள் இந்தியாவில் அவர்களுடைய ஆட்சியை நிறுவியபின் பொதுவான சட்டக்கல்விக்கான கல்விக் கூடங்களை அறிமுகப்படுத்தினர். இந்தப் பாதையில் 1857ம் வருடம் எடுக்கப்பட்ட முதல் படி முக்கிய நகரங்களான கொல்கத்தா, சென்னை மற்றும் மும்பை ஆகிய மூன்று இடங்களில் உள்ள பல்கலைக்கழகங்களில் போதிக்கும் ஒரு பாடமாக சட்டக் கல்வி அறிமுகப் படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து பஞ்சாப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டபின் லாகூரில் ஒரு சட்டக் கல்லூரி அமைக்கப்பட்டது. இவ்வாறாக, பொதுவான சட்டக் கல்வி தொடங்கப்பட்டு வேரூன்றி இந்த உபகண்டத்தில் அது வழிகாட்டியாக இருந்தது.

ஆரம்ப காலங்களில், சட்டப் படிப்புகள் முழு நேரப்படிப்பாக இருந்திருக்கவில்லை. மொழிகள் அல்லது சமூக விஞ்ஞானங்கள் சம்பந்தப்பட்ட ஒரு முழு முதுகலைப் பட்டப்படிப்பில் ஒரு பகுதி நேர படிப்பாக சட்டமும் ஒரு பாடமாக இருந்தது. சட்ட பட்டதாரிகள் ஆவதற்கு ஒரு குறிப்பிட்ட தரங்களோ கல்வித்தகுதிகளோ நிர்ணயிக்கப்படவில்லை. குறைந்த அளவிலான சட்டக்கல்விச்சாலைகள் மூலம் சட்டப்பட்டப்படிப்புகள் தொடங்கப்பட்ட போதிலும், சமுதாயத்தில் வசதி படைத்தவர்கள் இங்கிலாந்து சென்று அங்கிருந்து பாரிஸ்டர்களாகத் (Barristers) திரும்பினர்.

நாடு சுதந்திரம் பெற்று, அரசியல் சட்டம் அமுலுக்கு வந்தபின் நாட்டை நிர்வகிக்க சட்ட விதிமுறை என்பது அடிப்படையகிப்போனதன் விளைவாக நாட்டில் சட்டக் கல்வியை தற்காலத் தேவைகளுக்கேற்ப மாற்றியமைக்க வேண்டிய அவசியம் எழுந்தது. 1950களில் பெருமளவிலான கல்விக்கூடங்களில் சட்டம் ஒரு பாடமாக அறிமுகப்படுத்தப்பட்டது. (முழு நேரம் மற்றும் பகுதி நேரம்). சட்ட பாடம் தொடங்குவதற்கு முன்பாக எந்தவொரு விதிமுறைகளும் இல்லாததாலும், ஆசிரியரின் கல்வித் தகுதிகள் குறித்து நிர்ணயிக்கப்படாததாலும், ஆரம்ப காலத்திலேயே சட்டக்கல்வியின் தரம் குறைந்தே காணப்பட்டது.

``நமது சட்டக் கல்லூரிகள் உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ ஒரு உயர்ந்த எழுச்சி பெறவில்லை. மேலும் சட்டம் ஒரு செறிவான பாண்டித்தியம் பெற்ற மற்றும் அறிவூட்டும் ஆய்வுடன் கூடிய சகாப்தத்தில் அடியெடுத்து வைக்கவில்லை.`` என்று அன்று Dr. S.ராதாகிருஷ்ணன் கூறியது குறிப்பிடத்தக்கது.

நமது பகுதி நேர ஆசிரியர்களால் நடத்தப்படும் சட்டப்படிப்புக்கான கல்விக்கூடங்கள் வித்தியாசமான தகுதிகளும் சராசரி திறனும் உள்ள எந்த பட்டதாரிக்கும் எளிதில் தொடரக்கூடிய நிலையில் இருந்தது. பாடம் நடத்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாத பெரும்பாலான இப்படிப்பட்ட கல்விக்கூடங்கள் தன்னிச்சையாக செயல்படுவது ஆச்சரியத்துக்கு உரியது அல்ல. பல்கலைக்கழகங்களால் நடத்தப்படும் சட்டப் பரிட்சைகளில் கைகொள்ளப்படும் விதம் வெறும் ஞாபகசக்தியை சோதிக்கும் விதத்திலான சாதாரண கேள்விகளைக் கொண்டது. பிரசுரிப்பவர்களின் சிறு கட்டுரைகளைக் கொண்ட பிரசுரங்களை மனப்பாடம் செய்வதன் மூலமே மாணவர்கள் தேர்ச்சியடைந்து விடுகிறார்கள். இதன் காரணமாக, நாட்டின் எல்லா பகுதிகளிலும் சட்டத்தின் அடிப்படையையே அறியாத அரைவேக்காட்டு வழக்குரைஞர்கள் பெருகி விடுகிறார்கள்.

1958ம் ஆண்டு, சட்டக் கல்வியின் சீர்கேடான நிலைக்கு எதிராக சட்ட அமைப்பு குரல் கொடுத்தபோது, நாட்டில் 43 கல்விக்கூடங்கள் 20000 மாணவர்களை மட்டுமே சட்ட பரிட்சைக்குத் தயார் செய்தது. வழக்குரைஞர்களுக்கான சட்டம் (Advocates Act) அமுலுக்கு வந்தபின்தான் அறுபதுகளில் சட்டக் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை உணர முடிந்தது. இந்த நிலை இன்றுவரை தொடர்கிறது. 1990ம் வருட ஆரம்பம் வரை போபாலில் நான்கு சட்டக் கல்லூரிகள் இருந்தன. இப்போது 22 சட்டக் கல்லூரிகள் இருப்பதிலிருந்து சட்டக் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பதை அறியலாம். உத்தரப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தானிலும் இதே நிலைதான். இந்தக் கல்லூரிகள் பணம் சம்பாதிப்பதில் குறியாக இருப்பதன் மூலம் சட்டக் கல்வியின் தரம் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது. பட்டப்படிப்பு பரிட்சையில் குறைந்த பட்ச மதிப்பெண்கள் பெற்றிருந்தாலே இந்த சட்டக் கல்விக்கூடங்களில் சுலபமாக அனுமதி பெறுவதற்குப் போதுமான தகுதி ஆகும். ஆயிரக்கணக்கான மாணவர்கள் தகுதியுள்ளவர்கள் ஆகி அனுமதியும் பெறுகிறார்கள். இந்த தரமற்ற சட்டக் கல்விக்கூடங்களில் போதுமான கட்டிடங்களோ மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப தகுதியான ஆசிரியர்களோ மற்றும் ஒரு நூலகமோ இல்லை. இந்த கல்விக்கூடங்களில் ஒரு சில முழு நேர ஆசிரியர்கள் தவிர பெரும்பாலும் பகுதி நேர ஆசிரியர்களே உள்ளனர். சட்டக் கல்விக் கூடத்துக்கே வராமல் சில நூறு மைல்கள் தூரத்தில் வீட்டில் இருந்து கொண்டே அப்படிப்பட்ட கல்விக் கூடங்களிலிருந்து ஒரு மாணவன் சட்டப்பட்டதாரியாக வெளிவருகிறான்.

69 மாணவர்கள் கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என்று சட்டக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களைப் பற்றி அண்மையில் வெளியான செய்தி அனைவரின் நெஞ்சையும் பதைபதைக்க வைத்தது. இந்த 69 பேரும் சட்டப்படிப்பை முடித்த பின் எத்தகைய வழக்குகளில் ஆஜராவார்கள்? நாட்டின் சட்டம், ஒழுங்கை பாதுகாக்க/நிலைநிறுத்த இவர்கள் தகுதி உடையவர்களா என்பது தான் இங்கே மிகப்பெரிய கேள்விக்குறி?

இன்று குற்றவாளியாக நீதிமன்றத்தின் வாசலில் காத்திருந்த ஒருவன் அடுத்த 3 வருடங்களில் கருப்பு அங்கி அனிந்த வழக்கிறிஞராக நிற்கிறான். இதனால் மற்ற மாநிலங்களுக்கு சென்று சட்டம் படிக்கும் சில உண்மையான மாணவர்களுக்கும் இதே பழிச்சொல் தொடர்கிறது. குற்றவாளிகளை களம் கானும் பட்டியலில் முறையாக பயின்ற ஒரு நல்ல மாணவனின் பெயரும் இடம் பெற நேரிடுகிறது. கல்விக்கூடமே செல்லாத சட்ட பட்டதாரிகள் வழக்குரைஞர்களாகச் சேர்ந்தபின் கட்சிக்காரரையும் குழப்பி நீதிமன்ற நேரத்தையும் வீணடிக்கிறார்கள். இன்றைய தேதியில், சுமாராக 101 பல்கலைக்கழகங்கள் மற்றும் 500 சட்டக்கல்லூரிகள் ஒவ்வொரு வருடமும் இரண்டு இலட்சம் சட்ட பட்டதாரிகளை வெளியேற்றுகிறார்கள். சட்டக்கல்வியில் உள்ள பாதிப்பை சீரமைக்க முதல் நடவடிக்கையாக நாடு முழுவதும் +2 படிப்புக்குப்பின் ஐந்து வருட சட்டப்படிப்பை அமுலாக்க வேண்டும். 1988ம் ஆண்டு நிறுவப்பட்ட காலம் முதலே இந்தியப் பல்கலைக்கழகம், பெங்களூரின் தேசீய சட்டக் கல்விக்கூடம் தனிப்பட்ட முறையில் ஐந்து வருட சட்டப் படிப்பை நடத்தி வருகிறது. அதனுடன் இந்தியாவின் மாநிலங்களில் பல தேசீய சட்ட கல்விக்கூடங்கள் நடத்துகின்றன. பல கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் தற்காலிக முறையில் மூன்று வருட படிப்பும் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. பிற தொழில் சார்ந்த படிப்புகளான பொறியியல், மருத்துவம், வர்த்தகம், கட்டிடக்கலை முதலியவற்றில் இவ்வாறான புகார்கள் எப்போதுமே வந்ததில்லை என்பதை கருத்தில் கொண்டு +2 வரையிலான படிப்பு முடிந்த பின் ஒரு மாணவன் தன்னுடைய மேற்படிப்பைத் தீர்மானிக்க ஒரே மாதிரியாக ஐந்து வருட சட்டப்படிப்பை அமுலாக்குவதனால் மட்டுமே வரும் காலங்களில் நாட்டில் சட்டக்கல்வியின் தரம் உயரும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இருக்க முடியாது.